ஏன் புதிய நாடாளுமன்றதில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 543- ல் இருந்து 888 ஆக அதிகரித்துள்ளது?

ஏன் புதிய நாடாளுமன்றதில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 543- ல் இருந்து 888 ஆக அதிகரித்துள்ளது?

பல்வேறு சர்ச்சைகள்/வழக்குகள்/எதிர்ப்புகளை தொடர்ந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு, 1000 கோடி ஒதுக்கீடு என பத்திரிக்கைகளில் வகைவகையாக செய்தி வந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் இத்திட்டம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை தெரிவித்தார். அதில் 971கோடி செலவில் மிக பிரம்மாண்டமாகவும் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் 2024க்குள் தயாராக இருக்கிறது புதிய பாராளுமன்ற கட்டிடம் என குறிப்பிட்டிருந்தார்.

இப்போதிருக்கும் பழைய கட்டிடம் விரைவில் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல். இக்கட்டிடத்திற்கான பிராஜக்டை டாடா நிறுவனம் எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் லோக் சபா இருக்கைகளின் எண்ணிக்கை 888 எனவும், இராஜ்ய சபாவில் 384 எனவும் தெரிவித்திருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.

அதிக இருக்கைகளுக்கான காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வுக்கானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி ஒரு அமர்வு மிக மிக அபூர்வமானது. சுதந்திர இந்தியாவில் இதுவரை 4 முறை மட்டுமே இப்படி நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு அத்திபூத்த அமர்வுக்காக ஏன் இரண்டு அவைகளின் இருக்கைகளையும் அதிகரிக்க வேண்டும்? அதுவும் இந்திய அரசியல் சட்டத்தின்படி அதிகபட்சமாக லோக் சபாவில் 552 எம்.பிகள் தான். ஆனால் மாநில வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற அவைகளின் இருக்கைகளை அதிகரித்துக்கொள்ளலாம் என்பதற்கிணங்க இது சாத்தியப்படும்.

1970களில் இந்திய அரசுக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் எனும் கொள்கை தீவிரமாக இருந்ததால் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மறுபரிசீலிக்கும் விஷயம் தொடர்ச்சியாக தள்ளிப்போடப்பட்டது. 2001 கணக்கெடுப்பின்போதே செய்ய வேண்டியது 2026க்கு ஒத்திவைக்கப்பட்டது. அது விரைவில் அமல்படுத்தப்படலாம் என்பதன் அறிகுறியாகவே இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

தமிழகத்தில் சராசரியாக 1.8மில்லியன் மக்களுக்கு ஒரு எம் பி இருக்கிறார் என்றால் உத்தரபிரதேசத்தில் 3 மில்லியன் மக்களுக்கு ஒரு பிரதிநிதி தான் இருக்கிறார் ஆக இதன் மூலம் மத்திய அரசு செய்ய போவது என்னவென்றால் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல் மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க போகிறது.

இதற்கு அச்சாரமாக வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்க போகிறது உதாரணமாக எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் பெரிய பாராளுமன்ற தொகுதிகள் இரண்டாகவோ அல்லது மூன்றாக கூட பிரிக்க படலாம் தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 39 என இருப்பது 46 முதல் 49 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது, எனவே குறைந்தது தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 -ல் இருந்து 700 முதல் 750 வரை அதிகரிக்கலாம்.

இதையடுத்துதான் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 888 ஆக வடிவமைத்து உள்ளது மத்திய அரசு இதனால் மத்திய அரசிற்கு என்ன லாபம் என கேட்கிறீர்களா? ஒன்றல்ல இரண்டு லாபங்கள் இருக்கிறது நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்க பட்டால் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற பொது தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் மற்றொன்று இனி மொழி பிரிவினைவாதம் வடக்கு தெற்கு என பேசவாய்ப்பே இல்லை ஒரே இந்தியா என்ற நகர்வு தொடங்கும்.

கால மாற்றத்திற்கு ஏற்ப தேர்தல் சீர்திருத்த நடைமுறை மேற்கொள்ளாத காரணத்தால் உலக வல்லரசு நாடான அமெரிக்கா தற்போதுவரை வாக்குகளை எண்ணி கொண்டு இருக்கிறது, நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெறுகிறது, இது போன்று வரும் காலங்களில் இந்தியாவிலும் நடக்க கூடாது என்பதற்கான முதல் படிதான் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மறுவரையரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami