துணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ்? திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

துணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ்? திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்

அடுத்து நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியாகவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சொந்த கட்சியிலேயே தன்னை முழுமையாக அதிகாரம் செய்ய விடாமல் தடுக்கும் ஒபிஎஸ் மற்றும் தேசிய கட்சியான பாஜக, அதிமுக கட்சியை கைப்பற்ற நினைக்கும் சசிகலா மற்றும் தினகரன் என அனைவரையும் ஒரேயடியாக ஓரம் கட்டவும் தனக்கான தனித்த அடையாளத்துடனும் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என முடிவெடுத்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதற்காக எடப்பாடி பழனிசாமி போட்டிருக்கும் திட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதல்வராக வேண்டுமென்று போட்ட அவரது இந்த திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் இணைந்திருக்கிறார். கடந்த கால அரசியல் வரலாற்றில் தமிழகத்தில் திமுக, அதிமுக தனித்து ஆட்சி செய்யும் என்ற நிலையை மாற்றி மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி என்ற நிலை உருவாக வேண்டும் என்பதை தனது கட்சி அளவில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். அதற்கு தற்போது வரவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தல் ஒரு சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று கணித்திருப்பதாக தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் கூறி வருகிறார்.

தமிழக அரசியலில் சூழ்நிலைக்கேற்றவாறு திமுக,அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்திருந்தாலும் தங்களுடைய கொள்கையிலிருந்து சிறிதும் பின்வாங்காமல் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள்,திட்டங்கள் என சிறப்பான எதிர்க்கட்சியாகவே பாமக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற பிரச்சாரத்துடன் அன்புமணி ராமதாஸ் அவர்களை தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை தனியாக சந்தித்தது.அந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லையென்றாலும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்விகளை தீர்மானித்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிரூபித்து காட்டியது.

Loading...
READ  எங்க ஏரியாகுள் ரம்ஜானா போட்டுத்தாக்கிய ஆதிவாசிகள்

அடுத்து 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி பாமக அதிமுகவோடு கூட்டணி வைத்த போது எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆட்சி தொடர பாமகவின் வாக்கு வங்கி பெரிதும் கைக்கொடுத்துள்ளது. இந்த நிலையில் இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தல் வரை தொடரும் என அறிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் இது போன்றதொரு வெறும் தொகுதிகளுக்கான கூட்டணியை அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அமைப்பது சரியாக இருக்காது என்று கருதுகிறார். அதாவது 2021 சட்டமன்றத் தேர்தலைக் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தோடும் அதற்கு உடன்பட்ட கட்சியோடும் சந்திக்க பாமக கொள்கை அளவில் முடிவு செய்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதன்படி தற்போதைய எதிர்க்கட்சியான திமுகவுடன் பாமக கூட்டணி என்பது சாத்தியமில்லை. கடந்த காலங்களில் திமுக மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் இருந்தபோதும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக நிராகரித்தே வந்திருக்கிறது. சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு மண விழாவில் பேசிய ஸ்டாலின், ‘திமுக 1971இல் பெற்றதைப் போல 200 இடங்களில் வெற்றிபெறும்’ என்று கூறியிருப்பதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதையெல்லாம் ஸ்டாலின் ஓர் அரசியல் முடிவாகக் கூட கருதவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.தேர்தல் நேரத்தில் அதிமுகவின் முடிவை பொறுத்து திமுகவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

அதேநேரம் அதிமுகவில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் புதிய சக்தியாக உருவெடுக்கவில்லை. தர்ம யுத்தம் என்ற பெயரில் அவருக்கு அந்த வாய்ப்பு காலத்தால் தானாக வழங்கப் பட்டபோதும் அவர் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுடன் இணைந்து விட்டார். எனவே ஜெயலலிதாவுக்குப் பிறகான அதிமுகவில் தலைமை தாங்கும் ஆளுமை என்ற அளவில் பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி பழனிசாமி தற்போது முன்னிலை வகிக்கிறார். இப்போது தான் வகிக்கும் முதல்வர் பதவி என்பது தனக்கு மக்கள் வழங்கவில்லை என்றும் அது யானை தூக்கிப்போட்ட மாலை என்பது போன்றது என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும்.

READ  பாஜகவில் இணைவது குறித்து மாரிதாஸ் விளக்கம் !

ஆனால், அதற்காக கிடைத்ததை வைத்து அப்படியே இருந்து விடாமல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தனக்கான தேர்தலாக மாற்றி தன் தலைமையால் வெல்லக் கூடிய தேர்தலாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தால் திமுகவிற்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இதன் படி அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும் பட்சத்தில் பொதுவாக அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள படித்த இளைஞர்களின் வாக்குகளை பெருமளவு அதிமுக கூட்டணி பெற்று விடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.அடுத்து திமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருக்கும் வன்னியர்கள் கூட அன்புமணி ராமதாஸை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வடமாவட்டங்களில் பாமகவிற்கு செல்வாக்குள்ள 80 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் அன்புமணியின் தம்பிகள் என்ற முப்படை அமைப்பை ஏற்படுத்தி பாமக சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுவிற்கு வியூகம் வகுத்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அதிமுக கூட்டணி ஒரு மகத்தான வெற்றி பெற வேண்டுமென்றால் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் பாமக சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்ற நிலைக்கு பாமகவும் தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.

பாமக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தனித்துப் போட்டியிட்டு விட்டது. ஆனாலும் தங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்கவில்லை என்பதில் மருத்துவர் ராமதாஸுக்குப் பெரிய வருத்தம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தை வைத்துத் தேர்தலைச் சந்திப்பது என்பதும் அதன் மூலம் அன்புமணி ராமதாஸை வலுவான துணை முதல்வர் ஆக்குவது என்பதும் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸின் வியூகமாக இருக்கிறது என்கிறார்கள்.

READ  பாண்டே தனது தாடியை எடுக்க கூடிய நேரம் வந்துவிட்டது !

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், அதிமுகவின் அடுத்த தலைவர் தானே என்பதையும் நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களின் செயல்பாடுகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். தேசிய அளவில் பணிந்து போகாமல் இருக்க பாஜகவையும் தவிர்க்க வேண்டும் என்ற அரசியல் சூழலில் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரம் எடப்பாடி பழனிசாமிக்கும் தற்போது தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அதன்படி அதிமுக பாமக கூட்டணி ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக மூத்த நிர்வாகி இது ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் இடையே மோதலை உண்டுபண்ணும் நோக்கில் திமுகவினர் கிளப்பிய பொய் செய்தி என்றும், அதிமுகவில் தற்போது துணை முதல்வர் பதவிக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார், மேலும் தெரிவித்துள்ள அவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் போது யார் முதல்வர் வேட்பாளராக அதிமுக சார்பில் முன்மொழிய படுவார் என்பதனையும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here